Tuesday, 29 January 2013

மரபு சாரா தீவனங்கள்:

 


மரபுசாரா தீவனங்கள்:


கால்நடைகள் பெரும்பாலும் வைக்கோல், தட்டை போன்ற விவசாய உபபொருட்களை தீவனத்திற்காக நம்பியுள்ளன. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின்போது தீவன பொருட்கள் கிடைப்பது அரிதாகின்றது. இச்சூழ்நிலையில் மரபுசாரா தீவனப் பொருட்களைத் தீவனமாக பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்.

உலர்ந்த புற்கள், காய்ந்த மரக்கிளைகள் போன்ற தீவனங்களின் மீது தண்ணீர் அல்லது உப்புக்கரைசல் (2 சதம்) தெளித்தபிறகு தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
* வெல்லம் அல்லது சர்க்கரைப் பாகு (மொலாசஸ்) போன்ற இனிப்பான பொருட்களை தீவனங்களின்மீது தெளித்தபின் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

மரபுசாரா தீவனங்களான கரும்புத் தோகை, கரும்பு சக்கைத்தூள், யூரியா - சர்க்கரைப்பாகு - தாது உப்பு அச்சுக்கட்டி, ஈஸ்ட் கழிவுப்பொருள், மரவள்ளி இலை, மரவள்ளி தோல் / பட்டை, மரவள்ளி திப்பி, புளியங் கொட்டைத்தூள், மாம்பழ தோல், மாங்கொட்டைத்தூள், வேப்பம் புண்ணாக்கு, கருவேல் காய், பருத்திக் கொட்டை உமி, பருப்பு பொட்டு/ குருணை, மக்காச்சோளத்தவிடு, சோளப்பூட்டை, முந்திரிப்பருப்பு கழிவு, காகித கழிவு, கோழி எச்சம், நீர் பூங்கோரை, வாழைஇலை, வாழை மர கிழங்கு மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மர, புல் வகைகளான வேப்ப இலை, புளியரை இலை, சூபா புல் இலை, மூங்கில் இலை, கிளைரிசிடியா இலை, வாகைமர இலை மற்ற மர இலைகள், புல் வகைகளில் கொழுக்கட்டைப்புல், முயல்மசால், தட்டைப்பயறு போன்ற வேர்முடிச்சு கொண்ட தீவனப் பயிர்களுடன் 3:1 விகிதத்தில் சேர்த்து கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.


மரபு சாரா தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் தீவனப் பற்றாக்குறையை குறைக்கலாம். தீவனத்திற்கு ஆகும் செலவினை இவற்றின் மூலம் குறைக்கலாம்.கரும்புத் தோகையை விவசாயிகள் பொதுவாக வயல்வெளிகளில் வைத்து எரித்துவிடுகின்றனர். இதில் 2 சதம் செரிமான புரதமும் 50 சதம் மொத்த செரிமான சத்துக்களும் அடங்கியுள்ளன. கால்நடைகளுக்கு மிதமான தீவனமாக அளிக்கும்போது புரதம், சுண்ணாம்பு சத்துக்களை சேர்த்து அளிக்க வேண்டும். தேவைக்கு போக மீதியுள்ள கரும்புத் தோகையை ஊறுகாய்ப்புல்லாக மாற்றி சேமித்து வைக்கலாம். கொடுக்கும் அளவு - மாடுகள்-15-20 கிலோ, ஆடுகள்-1-2 கிலோ.

கரும்புச்சக்கைத்தூளில் புரதம் குறைவாகவும் நார்ப்பொருட்கள் அதிகமாகவும் உள்ளன. 4 சதம் யூரியா கரைசலில் 30 சதம் ஈரப்பதத்தில் 3 வாரங்கள் காற்று புகா வண்ணம் வைத்திருந்து பிறகு கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். மேலும் சர்க்கரைப்பாகு, யூரியா, உப்பு, தாது உப்பு கலவை ஆகியவைகளைச் சேர்த்து தீவன கட்டிகள் தயாரிக்கவும் கரும்புச் சக்கைத் தூளைப் பயன்படுத்தலாம்.

சர்க்கரைப்பாகு, யூரியா, தாது உப்பு, தவிடு, சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றைக் கொண்டு தீவனக் கட்டிகள் தயாரிக்கலாம். சர்க்கரைப் பாகுடன் தவிடு (20:80) சேர்த்து இனிப்பு தவிடு தயாரித்து மாடுகள், ஆடுகளுக்கு அளிக்கலாம்.

மரவள்ளி இலை தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் அறுவடைக்காலங்களில் அதிகம் கிடைக்கிறது. மரவள்ளி இலையில் புரதம், சுண்ணாம்பு, தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. உலர்த்திய இலைகளைக் கால்நடைகளுக்கு அளிப்பதால் நச்சு ஏற்படாது. மரவள்ளி தோல்/ பட்டையில் 3 சதம் புரதம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளது. ஈரத் தோலில் ஹைட்ரோசயனிக் அமிலம் உள்ளதால், உலர்த்தி மரவள்ளித் தோலை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 3-5 கிலோ வரையும், ஆடுகளுக்கு அரை கிலோ வரையும் தீவனமாக அளிக்கலாம். அல்லது கலப்பு தீவனத்தில் 30 சதவீதம் வரை சேர்க்கலாம்.

* தோல் நீக்கிய புளியங்கொட்டைத் தூளில் 12 சதம் செரிமான புரதமும், 65 சதம் மொத்த செரிமான சத்துக்களும் உள்ளன. இதனை நாள் ஒன்றுக்கு 1.5 கிலோ வீதம் கால்நடைகளுக்கு அளிக்கலாம் அல்லது கலப்பு தீவனத்தில் 30 சதவீதம் வரை சேர்க்கலாம்.

* மாம்பழத்தோலில் சர்க்கரை, நார்ச்சத்து அதிகம் . ஈரப்பதம் அதிகம் இருப்பதால் மரவள்ளி திப்பி அல்லது தவிட்டுடன் 40:60 என்ற விகிதத்தில் கலந்து வெயிலில் உலரவைக்கலாம். அல்லது ஊறுகாய்ப்புல் தயாரிக்கலாம்.

கருவேல் காய் - இதில் 5 சதம் செரிமான புரதம், 60 சதம் மொத்த செரிமான சத்துக்கள் உள்ளன. ஆடுகள் இதனை விரும்பி உண்ணும். இதை கலப்பு தீவனத்தில் 30 சதம் வரை சேர்க்கலாம்.

காகித கழிவு: இதில் செல்லுலோஸ் அதிகம் (70 சதம்). 6 கிலோ மசித்த காகித கழிவுடன் சர்க்கரைப்பாகு, 4 கிலோ உப்பு, 50 கிராம் தாது உப்புக்கலவை சேர்த்து கொடுத்தால் போதுமானது.

வேப்ப இலை கசப்பாக இருப்பதால் ஆரம்பத்தில் கால் நடைகள் விரும்பி உண்பதில்லை. எனினும் நாளடைவில் உண்ண பழகிக் கொள்ளும். இதில் புரதம், தாது உப்புக்கள் அதிகம். கொடுக்கும் அளவு - மாடுகளுக்கு 5-10 கி, ஆடுகள் -1-2 கி

Saturday, 6 October 2012

 ஐயா  நம்மாழ்வார்.,



அரசின் மானியம் பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை :


:
விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணியாகும். இந்த தண்ணீர் பாசனம் பயிர்களுக்கு சென்று சேரும் முன் பல்வேறு நிலைகளில் விரயமாகிறது. இதனை தடுத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் சில திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் ஒன்று தான் தேசிய நுண்நீர் பாசன இயக்க திட்டம். நீரின் அழுத்த விசையை பயன்படுத்தி பாசனம் செய்யும் அனைத்து பாசன முறைகளும் இந்த திட்டத்தில் அடங்கும். பொதுவாக நுண்நீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மானியம்
சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகள் இலவசமாகவும், இதர விவசாயிகள் 75 சத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு, அதாவது நஞ்சை நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் அளவிற்கும், புஞ்சை என்றால் 5 ஏக்கர் அளவிற்கும் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மத்திய அரசின் 50 சத மானியத்திலும், மாநில அரசின் 50 சதவீத மானியத்தையும் பெற்று இலவசமாகவே சொட்டு நீர் பாசனத்தை தங்களது நிலத்தில் அமைத்துக் கொள்ளலாம்.
இதர விவசாயிகள் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசின் மானியம் 25 சதவீதத்தையும் பெற்று ஆக மொத்தம் 75 சதவீதம் மானியத்தை பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.
அதிக பட்ச தொகை
இந்த அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அதிகபட்சமாக 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது இது 100 சதவீத மானியத் தொகையின் அளவு ஆகும். இந்த தொகையில் சிறு, குறு விவசாயிகள் காய்கறிகள், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு 1 ஏக்கருக்கும், வாழை என்றால் ஒன்றரை ஏக்கருக்கும், பப்பாளி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா ஆகியவற்றுக்கு 3 ஏக்கர் முதல் 4 ஏக்கர் வரையிலும் சப்போட்டா, மா, தென்னை ஆகியவற்றுக்கு 5 ஏக்கர் வரையிலும் இலவசமாகவே சொட்டு நீர் பாசன கருவிகளை அமைத்துக் கொள்ளலாம்.
பெரிய விவசாயிகள் அதிகபட்சமாக 12.5 ஏக்கர் வரை 75 சத மானியத்தில் சொட்டுநீர் பாசனக்கருவியை எந்த பயிருக்கும் அமைக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தங்களது நில ஆவணங்களுடன், அதாவது கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேசன்கார்டு நகல்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும். சிறு, குறு விவசாயிகள் தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும். ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்ந்தெடுத்த நிறுவன பொறியாளர், விவசாயின் நிலத்தை ஆய்வு செய்து சொட்டு நீர் பாசன அமைப்பை அமைக்கும் முன் ஆய்வு செய்வார். பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயியின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும். இந்த விண்ணப்பம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். அதற்கு பின் விவசாயியின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும். விவசாயி தனது செலவில் பூமிக்கு அடியில் பதிக்க வேண்டிய மெயின், சப்மெயின் குழாய்களுக்கு ஒன்றரை அடி ஆழ வாய்க்கால் எடுக்க வேண்டும். இதற்கு பின் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனம் பாசன கருவிகளை நிர்மாணம் செய்யும். நிறுவனம் சொட்டு நீர் பாசன அமைப்பை அமைத்து அதன் செயல்பாட்டை ஆய்வு செய்த பின் நிறுவனத்திற்கு விவசாயியின் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் சொட்டு நீர் பாசன அமைப்பை அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்யும்.
பயன்கள்
சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் நீர் விரையம் குறையும். பயிர்களுக்கு பாசன நீர் மூலம் பரவும் பூஞ்சான நோய்கள் தடுக்கப்படுகிறது. சாதாரண பாசன முறையில் பாய்ச்சும் நிலப்பரப்பை விட இரண்டரை முதல் மூன்று மடங்கு நிலத்திற்கு கூடுதலாக நீர் பாய்ச்ச முடியும். பயிர்களுக்கு சீரான நீர் மற்றும் உரம் கிடைப்பதால் முறையான வளர்ச்சியும், சீரான முதிர்ச்சியும் கிடைக்கும். மொத்த விளைச்சல் 50 முதல் 100 சதவீதம் அதிகரிக்கும்.
தகவல்: த.காமராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர், மதுரை கிழக்கு.
98652 80167
ஐயா நம்மாழ்வார்.