Saturday, 6 October 2012

விவசாயிகளுக்கு உதவும் தகவல் தொழில்நுட்பம்( இ-வேளாண்மை ):
 
விவசாயிகளுக்கு உதவுவதற்காக வேளாண் விரிவாக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. 2 ஆயிரம் விவசாயிகளுக்கு ஒரு வேளாண் விரிவாக்க பணியாளர் என்ற நிலையில் தான் இவர்களின் விகிதம் உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளிடம் வேளாண் விரிவாக்க சேவையை விரைவில் கொண்டு செல்ல இ-வேளாண்மை என்னும் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.
உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வள நிலவள திட்டத்தின் உதவியுடன் இ-வேளாண்மை செயல் ஆராய்ச்சி திட்டம் செயல்படுகிறது.

திட்டம் 1: இந்த திட்டத்தின்படி விவசாயிகளுக்கு தங்கள் பயிர் தொடர்பாக எழும் சந்தேகங்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால் செல்போன் மூலம் விவசாய அதிகாரிகளை அல்லது தன்னார்வ விவசாயிகளை தொடர்பு கொள்ள முடியும். இத்துடன் ரகம் தேர்வு செய்தல், சந்தை பற்றிய தகவல்கள் முதலிய விபரங்களை செல்போன் மூலம் பெறமுடியும்.
திட்டம் 2: கள ஒருங்கிணைப்பாளர் மற்றும் தன்னார்வ விவசாயி விவசாய நிலங்களை பார்வையிட்டு பாதிப்படைந்த தாவரங்களை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை கணிணியில் செலுத்தி இணைய தளத்தின் வாயிலாக மின்னஞ்சல் மூலம் மாவட்ட அளவிலான வேளாண் விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்படுகிறது.
திட்டம் 3: இது போன்ற புகைப்படம் வேளாண் விஞ்ஞானிகளுக்கு கிடைத்தவுடன் அது பற்றி விவாதிக்கும் விஞ்ஞானிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட தாவரங்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சொல்வார்கள்.
பிற வேளாண் விரிவாக்க செயல்கள்
இ-வேளாண் திட்டம் மூலம் விவசாயிகள் இது போன்ற தகவல்களை பெறுவதற்கு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். உறுப்பினர்களின் விவசாய நிலத்தினை பகுப்பாய்வு இடுதலுக்கு ஏற்பாடு செய்தல், தொழில்நுட்ப கருத்தரங்குகள், விருப்பப்பட்ட வேளாண் தலைப்புகளின் கீழ் கேள்வி பதில் நேரம் ஏற்பாடு செய்வது உள்பட பல நிகழ்வுகளும் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் விவசாய குடும்பத்தினர் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை கையாளும் திறன் பெற்று அறிவு சார் தகவல்களை பெற வழி செய்கின்றது. மாநில தேசிய அளவில் செயல்படுத்தக்கூடிய, விரிவாக்கம் அடையக்கூடிய திட்டமாக இந்த இ-வேளாண்மை திட்டம் செயல்படுகிறது. அதாவது விவசாயிகளையும் வேளாண் விஞ்ஞானிகளையும் இணைக்கும் ஒரு பாலம் தான் இந்த திட்டம் என்று சொல்லலாம்.
விவசாயிகள் இந்த திட்டம் பற்றி அறிய அருகில் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகலாம்.
தகவல்:கி.சுருளிபொம்மு, வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு)மதுரை.

0 comments :

Post a Comment