Thursday, 31 October 2013

கொட்டகை அமைத்தல்:



நமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடு வளர்ப்போர் அவற்றை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தல், மர நிழல்களில் அடைத்தல் மற்றும் வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தல் போன்ற முறைகளை மேற்கொள்ளுகின்றனர். குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதிகளில் ஆடுகளை அனுமதிக்காமல் இருத்தல், தீவிர முறையில் ஆடு வளர்ப்பது போன்ற, தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளை கொட்டகை அமைத்து வளர்ப்பதே சிறந்தது. மேலும் அறிவியல் ரீதியாக ஆட்டுப்பண்ணை அமைத்தல் மற்றும் கொட்டகை பராமரிப்பு பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
ஆடுகளுக்கான கொட்டகை அமைப்பதில் அதிக செலவில்லாத அதே சமயம் குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய கொட்டகை அமைக்க வேண்டும். நல்ல காற்றோட்டமுள்ள, மேடான, வடிகால் வசதியுள்ள பகுதிகளில் கொட்டகை அமையவேண்டும். நீளவாக்கில், கிழக்கு - மேற்காக அமையும் படி கொட்டகை அமைத்தல் நல்லது. கொட்டகை சுற்றுச்சுவர்கள் ஏதும் இல்லாமல் இரும்புத்தூண்கள் அல்லது மரத்தூண்களைக்கொண்டு அதன் மேல் கூரை அமையும்படி அமைக்கவேண்டும்.
கொட்டகையின் அளவு, அதில் அடைக்கக்கூடிய ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமையும். ஒரு வளர்ந்த வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டிற்கு ஏறத்தாழ 12 முதல் 15 சதுர அடி இடவசதி தேவை. எனவே 50 ஆடுகளுக்கு கொட்டகை அமைப்பதாக இருந்தால் 50 x 12 = 600 சதுர அடி அவசியம். இதற்கு 30 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட கொட்டகை அமைத்தால் போதுமானது.
ஆடுகளை இரவில் மட்டும் கொட்டகையில் அடைத்து, பகலில் மேய்ச்சலுக்கு அனுப்புவதாக இருப்பின் மேற்கண்ட 600 சதுர அடி இடவசதி மட்டுமே போதுமானது. ஆனால் ஆடுகள் நாள் முழுவதும் கொட்டகையில் இருக்கும். கொட்டில் வளர்ப்பதாக இருப்பின் அதே அளவு இடவசதிக் கொட்டகையை ஒட்டிய திறந்தவெளிப் பகுதியில் கொடுக்கப்படவேண்டும். இது ஆடுகள் சுதந்திரமாக நடமாடவும் கொட்டகையில் சாணம் மற்றும் சிறுநீர் அதிகம் சேராமலிருக்கவும் தேவைப்படுகிறது.
பொதுவாக ஆட்டுக் கொட்டகை மற்றும் அதனை ஒட்டிய திறந்தவெளிப் பகுதிக்கு கம்பிவலைகொண்டு தடுப்பு அமைப்பது எளிது மற்றும் செலவுக் குறைவானது. மேலும் இதனை தேவைக்கேற்ப வேண்டிய இடங்களில் பிரித்து கட்டிக்கொள்ளலாம். கம்பி வலையில் உயரம் செம்மறியாடுகளுக்கு ஏறத்தாழ 4 அடியும், வெள்ளாடுகளுக்கு 5 அடியும் இருப்பது அவசியம்.
housing of sheep
கொட்டகையின் நீளத்தை ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 100 ஆடுகள் வரை ஒரு கொட்டகையில் அடைக்கலாம். அதிலும் கூட குட்டிகள், கிடாக்கள் இவற்றிற்கு தனித்தனி அமைப்புகள் இரப்பது சிறந்தது. கொட்டகையின் அகலம் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏறத்தாழ 20 அடி முதல் 25 அடி வரை இருப்பதே நல்லது. அதற்கு மேல் அதிகரிக்கும் போது காற்றோட்டம் பாதிக்கப்பட்டு கொட்டகையில் அமோனியா வாயுவின் தாக்கம் காணப்படும். இது போலவே கொட்டகையின் உயரம் முக்கியமானது. கொட்டகையின் நடுப்பகுதி ஏறத்தாழ 9-12 அடி உயரத்திலும், சரிவாக பக்கங்களில் 6-9 அடி உயரத்திலும் அமைய வேண்டும். செம்மறியாடுகளை விட வெள்ளாடுகளுக்கு உயரமான கொட்டகை அமைப்பது நல்லது.
மேலும் பல கொட்டகைகள் உள்ள ஆட்டுப் பண்ணைகளில் அவற்றிற்கிடையே போதுமான இடைவெளி இருந்தால்தான், காற்றோட்டம் தடைபடாமல் இருக்கும். இடைவெளி கொட்டகையின் உயரத்தைப் போல் குறைந்தது இருமடங்கு இருக்கவேண்டும்.
கொட்டகையின் கூரை ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்), மங்களூர் ஓடு அல்லது கீற்றுக்களைக் கொண்டு அமைக்கலாம். கீற்றுக் கொட்டகை அமைத்தல் செலவினைக் குறைவாக இருந்தாலும், தீப்பிடிக்கும் அபாயம், பூச்சிகளின் தொல்லை, அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் போன்ற சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது கொஞ்சம் செலவு அதிகம் எனினும் நிரந்தரமான ஒன்று. முறையான பண்ணை அமைப்பவர்கள் வங்கிகளில் கடன் வாங்கி இதனைப் பின்பற்றலாம்.
ஆட்டுக் கொட்டகைக்கு மண்தரையே போதுமானது. தினம் ஒரு முறை சுத்தமாக கூட்டி சாணத்தை அப்புறப்படுத்தி விடவேண்டும். ஆடுகளின் சாணம் வறண்டே இருப்பதால் கூட்டி அள்ளுவது சுலபம். சிறுநீரின் அளவும் குறைவே என்பதால், மண்தரை அதனை உறிஞ்சிக்கொள்ளும். கொட்டில் முறையில் ஆடுகள் வளர்ப்போர், கொட்டகையில் உள்ள ஈரம் உலரும்படி செய்ய பகலில் ஆடுகளை திறந்த வெளிப்பகுதியில் மேய விடலாம். தினமும் அள்ளப்படும் சாணத்தை எருக்குழியினில் சேமித்து வைத்து தேவைப்படும்போது உரமாகப் பயன்படுத்தலாம் அல்லது விற்பனை செய்து விடலாம். வெள்ளாட்டின் எருவிற்கு அதிகத் தேவை உண்டு.
உயர்ரக ஆடுகளை வைத்திருப்போர் “துவாரத்தள அமைப்பு முறை” (Slatted Floor) எனப்படும் முறையிலும் தரையை அமைக்கலாம். இதில் தரையிலிருந்து சுமார் 1 1/2 - 2 அடி உயரத்தில் 1 1/2 முதல் 2 அடி அங்குல இடைவெளிவிட்டு வரிசையாக வைக்கப்பட்டு அதன் மேல் ஆடுகள் விடப்படும். ஆடுகளின் சாணம் தரையில் தங்காமல் இடைவெளிகளில் கீழே விழ வேண்டும். இம்முறையில் கொட்டகையை தினமும் சுத்தம் செய்யும் அவசியம் இல்லை. சாணம் ஓரளவு சேர்ந்தபிறகு அகற்றினால் போதும்.
ஆடுகளுக்கான தண்ணீர் மற்றும்  தீவனத் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள் சிமெண்ட் கொண்டு செய்யப்பட்ட வட்ட வடிவிலான அல்லது நீள்செவ்வக வடிவிலான தொட்டிகளாக இருப்பது சிறந்தது. இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை உட்பக்கம், சுண்ணாம்பு அடிக்கவேண்டும். ஏறத்தாழ 20 ஆடுகளுக்கு ஒரு தொட்டி தேவை.
இரும்புத்தகடு (அ) மரத்தினால் செய்யப்பட்ட தீவனத்தொட்டிகள் சுமார் 1 1/2 அடி உயரத்தில் 1 1/2 அடி உள்பக்கம் குழியாக இருக்குமாறு அரை வடட வடிவில் அமைய வேண்டும். நீளம் 5-6 அடி இருக்கலாம். 10-12 ஆடுகளுக்கு ஒரு தீவனத் தொட்டி தேவை. வெள்ளாடுகள் இவற்றினுள் ஏறிப்படுத்து அசுத்தம் செய்வதைத் தடுக்க அவற்றின் தலையை மட்டும் நுழைக்கும் அளவிற்கு கம்பித்தடுப்புகள் அமைக்கலாம். இவற்றை அடர்தீவனம் மற்றும் வெட்டப்பட்ட பசுந்தீவனங்கள் அளிப்பதற்குப் பயன்படுத்தலாம். ஆடுகளுக்கு மரத் தழைகளை அளிக்கும் போது அவற்றைக் கட்டித் தொங்கவிடுவது  தீவன விரயத்தைக் குறைக்கும்.
ஆட்டுக் கொட்டகையில் பேன்கள், உண்ணிகள், தெள்ளுப்பூச்சிகள் ஆகியவை அதிகம் காணப்பட்டால் கிருமி நாசினி (சுமத்தியான், மாலத்தியான், பியூடாக்ஸ்) கொண்டு மருந்தடிக்கலாம். குட்டிகளை அடைக்கும் கொட்டகையில் ஒவ்வொரு குட்டியீனும் பருவத்திற்கு முன்பு மண் தரையை லேசாக சுரண்டி அகற்றி புதிய மண் கொட்டுவது நல்லது. இது கழிச்சல், நிமோனியா போன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

0 comments :

Post a Comment